search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டு வரி"

    காட்பாடியில் வீட்டுவரியை குறைக்க கோரி குடியிருப்போர் நலசங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேலூர்:

    புதிய வரிவிதிப்பை அரசு ஆணைப்படி மாற்றி அமைத்திட வேண்டும், பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தரமான சாலைகள் அமைக்க வேண்டும், காவிரி கூட்டு குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக வழங்கபட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியிருப்போர் நலசங்கம் சார்பில் காட்பாடி காந்திநகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு குடியிருப்போர் நலசங்க தலைவர் பிச்சுமணி தலைமை தாங்கினார். அருள்தணிகை செல்வன், லோகநாதன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராதாகிருஷ்ணன், சிவசங்கர், அமரன், துரைபாண்டி, கண்மணி, துரைமுருகன், தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு கோ‌ஷம் எழுப்பினர். முடிவில் பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.

    சென்னையில் வீட்டு வரி வசூல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #PMK #Ramadoss #PropertyTax
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருவொற்றியூர் மற்றும் அதையொட்டிய குடியிருப்புகள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் என்று கூறப்பட்டாலும் அங்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எதுவும் பெரிய அளவில் செய்யப்படவில்லை.

    கட்டமைப்பு வசதிகளின் தரம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இணையாக இருக்கும் நிலையில், வீட்டு வரியின் அளவு அமெரிக்க நகரங்களுக்கு இணையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருவொற்றியூரில் வீட்டு வரி ஓரளவு நியாயமாகவே இருந்தது.

    ஆனால், ஒரு கட்டத்தில் எந்த நியாயமும் இல்லாமல் வீட்டு வரி கண் மூடித்தனமாக உயர்த்தப்பட்டது. உயர்த்தப்பட்ட வரி ஏழை மற்றும் நடுத்தர மக்களால் கட்ட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது.

    சென்னையில் பணக்கார மக்கள் வாழும் பகுதியாகவும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் நிறைந்ததாகவும் கருதப்படும் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், அடையாறு, பெசன்ட்நகர் ஆகிய பகுதிகளில் கூட சதுர அடிக்கு சராசரியாக ஒரு ரூபாய் மட்டுமே சொத்துவரியாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத திருவொற்றியூர் பகுதியில் ஒரு சதுர அடிக்கு ரூ.4.15 வீட்டு வரியாக வசூலிக்கப்படுகிறது.

    இத்தகைய சூழலில், வீடுகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால், அந்த வீடுகளை மறுமதிப்பீடு செய்து கூடுதல் வரி விதிக்கும் அதிகாரிகள், அந்த கூடுதல் வரியை 5 ஆண்டுகள் முன்தேதியிட்டு செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.

    இதனால், ஆண்டு வரியாக ரூ. 2000 செலுத்த வேண்டிய வீட்டுக்கு ரூ.41,500 வரி செலுத்த வேண்டியுள்ளது. சென்னையின் மற்ற பகுதிகளில் வசூலிக்கப்படும் வரியை விட இது 20 மடங்குக்கும் அதிகம்.

    இத்தகைய அதிக வரி விதிப்பால் மாநகராட்சிக்கு எந்த வகையிலும் கூடுதல் வருவாய் கிடைக்கவில்லை. மாறாக, தவறான நோக்கம் கொண்ட அதிகாரிகள், இடைத்தரகர்கள் ஆகியோர் தான் பயனடைகின்றனர்.

    பொதுமக்களிடம் கையூட்டு வாங்கிக் குவிக்கும் அதிகாரிகள், கையூட்டு கொடுத்தவர்களுக்கு மட்டும் வீட்டு வரியை குறைத்து நிர்ணயிக்கின்றனர். அதிக வரி நிர்ணயிக்கப்பட்ட மக்கள் வரி செலுத்த மறுப்பதால் மாநகராட்சியின் வருமானம் குறைந்துள்ளது. இதையெல்லாம் உணர்ந்து கொள்ளாமல் வரிக் குறைப்பு செய்ய மாநகராட்சி மறுப்பது நியாயமல்ல.

    இவை ஒருபுறமிருக்க சென்னை மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் வீட்டு வரி உயர்த்தப்பட்டு, புதிய வரி மதிப்பிடப்பட்டு வருகிறது. அதன்படி, இப்போது இருப்பதை விட இன்னும் ஒரு மடங்கு கூடுதலாக வரி செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே மக்கள் வரிச்சுமையையும், விலை வாசியையும் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக உயர்த்தப்படும் வரி மக்களின் சுமைகளை அதிகரிக்கும். மக்களின் சுமைகளை உணராமல் வீட்டு வரியை உயர்த்துவது கொள்ளைக்கு சமமாகும்.

    எனவே, திருவொற்றியூர் மண்டலத்தில் வீட்டுவரியை சென்னையின் மற்ற பகுதிகளில் வசூலிக்கப்படுவதற்கு இணையாக குறைக்க வேண்டும். அது மட்டுமின்றி, வீட்டு வரியை குறைத்து நிர்ணயிப்பதற்காக கையூட்டு வாங்கப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PMK #Ramadoss #PropertyTax
    வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய கோரி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். #PropertyTax

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அரியாங்குப்பம் தொகுதி குழு சார்பில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் பூபதி தலைமை தாங்கினார். துணை செயலாளர் கண்ணன், பொருளாளர் முருகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    மாநில துணை செய லாளர் அபிஷேகம், மாநில நிர்வாக குழு சரளா ஆகியோர் கண்டன உரையாற்றினர். தொகுதி நிர்வாகிகள் பச்சையப்பன் இந்து, பாலசுந்தரம், லெனின், ராஜி, வசந்தா, முத்துகுமார், கணேசன், செல்வராஜி, தினேஷ், ஈஸ்வரன் சுகதேவ், ரமணி, ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    புதுவையில் வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், குடிநீர் கட்டணம் மற்றும் மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும், குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும், வீடு இல்லாத மக்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட் டம் நடைபெற்றது.

    சென்னையில் வீட்டு வரி 50 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. கடைகள் உள்ளிட்ட வணிக வரி கட்டிடங்களுக்கு 100 சதவீதம் வரை வரியை உயர்த்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. #ChennaiCorporation
    சென்னை:

    சென்னையில் வீட்டுவரி சதுர அடிக்கு 50 பைசா முதல் 1 ரூபாய் வரை இப்போது விதிக்கப்படுகிறது. ஆனால் சென்னையுடன் இணைந்த புறநகர் பகுதிகளான அம்பத்தூர், முகப்பேர், புழல், மணலி பகுதிகளில் வீட்டுவரி சதுர அடிக்கு 3.30 வரை உள்ளது. ஆலந்தூரில் மிக அதிகமாக 6 ரூபாய் வரை சதுர அடிக்கு வரி விதிக்கப்படுகிறது.

    வீட்டுவரி ஏற்றத்தாழ்வு இருப்பதால் நிறைய இடங்களில் வீட்டுவரியை முறையாக செலுத்தாமல் பலர் பாக்கி வைத்துள்ளனர்.

    சென்னையில் 12 லட்சம் பேர் வீட்டுவரி மற்றும் வணிகவரி செலுத்தும் பட்டியலில் உள்ளனர். இதில் 60 சதவீதம் பேர்தான் முறையாக வரி கட்டுகின்றனர். மற்றவர்கள் மிகவும் காலதாமதமாக செலுத்துகின்றனர். தற்போதைய நிலவரப்படி இந்த ஆண்டு 750 கோடி அளவுக்குதான் வரி வசூலிக்கப்படுகிறது.

    சென்னை மாநகராட்சி ரூ.2500 கோடிக்கு மேல் வங்கிகளில் கடன் வாங்கி உள்ளது. இப்போதைய வரி வருமானத்தை வைத்து கணக்கிட்டால் 2032-ல் தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியும்.

    அதுமட்டுமின்றி புதிதாக கடன் பெற்று எந்த திட்டங்களையும் நிறைவேற்ற முடியாத சூழல் தற்போது நிலவுகிறது.

    எனவே வரிவருவாயை அதிகப்படுத்தினால்தான் உலக வங்கியிடம் கூடுதலாக கடன் பெற்று திட்டங்களை செயல்படுத்த முடியும்.

    சென்னையை பொறுத்த வரை கடந்த 1998-ம் ஆண்டு சொத்து வழிகாட்டி மதிப்புபடிதான் வரி உள்ளது. இப்போது வீட்டு மதிப்பு, கடைகள், நிலங்களின் மதிப்பு பலமடங்கு உயர்ந்து விட்டது. அதாவது 450 சதவீதம் அளவுக்கு உயர்ந்து விட்டது. ஆனாலும் வீட்டுவரி, உயர்த்தப்படவில்லை. இதனால் முக்கிய திட்டங்களை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது.


    இது குறித்து சென்னை ஐகோர்ட்டு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வீட்டுவரியை மாற்றி அமைக்க உள்ளாட்சித் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் தலைமையில் மாநகராட்சி உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் இப்போதைய வழி காட்டி மதிப்புபடி சொத்து வரியை உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 1998-ம் ஆண்டு 10 சதவீதமாக இருந்த சொத்து வழி காட்டி மதிப்பு இப்போது 450 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனாலும் அந்த அளவுக்கு வரியை உயர்த்தாமல் கடை, நிறுவனங்களுக்கு 100 சதவீதம் அளவுக்கு வரி உயர்வை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

    வீடுகளுக்கு 50 சதவீதம் அளவுக்கு வரியை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வருகிற திங்கட்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை புறநகரில் ஏற்கனவே வீட்டுவரி உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்களுக்கு குறைந்த அளவில் வீட்டு வரி உயரும். சென்னையின் மைய பகுதியில் இருப்பவர்களுக்கு தான் 50 சதவீத வீட்டுவரி உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ChennaiCorporation
    ×